திருச்சி, துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் அதிகமானோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 20 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில், இன்று காலை 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் காலை 7 மணியளவில் பயங்கர சத்தத்துடன் தொழிற்சாலையின் ஒரு அலகில் இருந்து வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையின் பாகங்கள் வெடித்து சிதறியது.
தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் பலர் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் சிக்கிய சிலரின் உடல் பாகங்கள் வெடித்து சிதறியது. இது தொடர்பாக அப்பகுதியினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் 6 வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த தோட்டா தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். தோட்டா தொழிற்சாலையால் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறி வந்தனர். ஆனால் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை நடந்த வெடி விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நடந்த வெடி விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பேசினோம். "இந்த ஆலையை அகற்ற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இப்படி ஒரு மோசமான விபத்து நடந்திருக்கிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் விபத்து நடக்கும்போது ஆலையின் அந்த பகுதியில் 20 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. புகை மூட்டமாக உள்ளதாலும், மழை பெய்து வருவதாலும் மீட்பு பணியில் சிக்கல் உள்ளது. இந்த ஆலையை அகற்ற போராடியபோது யாரும் இதற்கு செவிமடுக்கவில்லை. இது போன்ற ஆபத்து நேரும் என அன்றே நாம் எச்சரித்திருந்தோம்," என்றனர்.
ஆலைக்கு வெளியே உயிரிழந்தவர்களின் உடல்பாகங்கள் துண்டு துண்டாக சிதறியுள்ளன. அவை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில மணி நேரங்களுக்கு பின்னரே உயிரிழப்பு விவரங்கள் உறுதியாக தெரியவரும் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment