அகதி குழந்தைகளுக்கு உதவ ஒரே நாளில் 10 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்களைச் சேகரித்து துபாயைச் சேர்ந்த சமூக சேவகர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி ( வயது 57) ஆடிட்டராக துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1992-ம் ஆண்டு முதல் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி துபாயில்தான் வசித்து வருகிறார். துபாயில் போய் செல்வசெழிப்பில் திளைத்தாலும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் கிருஷ்ணமூர்த்தி. இதனால், 'அனைவருக்கும் கல்வி' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்தும் வருகிறார்.
ஆப்ரிக்கா நாடுகள், சிரியா போன்ற உள்நாட்டுப் போர் நடைபெறும் நாடுகளில் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு வழிகளில் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி பாடுபட்டு வந்தார்.கடந்த மாதத்தில் குழந்தைகளுக்காக ஒரே நாளில் 10, 975 கிலோ பொருட்களை கிருஷ்ணமூர்த்தி திரட்டினார். அதில் 50 ஆயிரம் நோட்டுப்புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2 ஆயிரம் பள்ளி பேக்குகளும் அடங்கும். இன்னும் ஏராளமான பொருட்கள் நன்கொடையாக கிடைத்தன. இந்த பொருட்கள் அனைத்தும் எமிரேட்ஸ் ரெட் கிரெசன்ட் அமைப்பின் வழியாக பாதிப்புக்குள்ளான குழந்தைகளும் கொண்டு சேர்க்கப்பட்டன. சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பயன் அடைந்தனர்.
உலக அளவில் ஒரே நாளில் 10,975 கிலோ எடையுள்ள பொருட்களை நன்கொடையாக திரட்டியது இதுவே முதன்முறை. தற்போது இது கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் 4, 571 கிலோ பொருட்கள் திரட்டியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''கொடுப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. பயன் அடையும் குழந்தைகளின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்த முடியும்'' என்கிறார்.
Comments
Post a Comment