கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பண ஒழிப்பிற்காக, பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின்படி, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அவற்றுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. நவம்பர் 8-ம் தேதி மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் பே-டிஎம் என்னும் 'ஆன்லைன்' பணப் பரிமாற்றத் தளத்தில், அவர் விளம்பரத் தூதுவராக செயல்படுவது குறித்து சர்ச்சைகள் வெளியாகின.
தகவல் உரிமைச் சட்டத்தின்படி, அண்மையில், ராம்வீர் சிங் என்பவர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து பெற்ற அறிக்கையில், மத்திய அரசு, கடந்த ஜூன் 2014 முதல் ஆகஸ்ட் 2016 வரையிலான காலகட்டத்தில், பிரதமர் மோடியின் விளம்பரங்களுக்காக மட்டும் மத்திய அரசு 1,100 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 1.4 கோடி ரூபாய். இத்தனைக்கும் இதில் செய்தித்தாள் மற்றும் புத்தகங்களில் வரும் மோடி விளம்பரங்களுக்கான செலவுகள் கணக்கிடப்படவில்லை. அவற்றையும் கணக்கிட்டால் நிச்சயம் இன்னும் பல நூறு கோடிகளைத் தாண்டும்.
உலகிலேயே மிகக் குறைந்த செலவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் மங்கள்யானை விட, மோடியின் விளம்பரங்களுக்கு ஆன செலவு இரட்டிப்பு மடங்கு என ராம் வீர் குறிப்பிட்டுள்ளார். மங்கள்யானை வடிவமைக்க 450 கோடி ரூபாயை இந்திய அரசு செலவு செய்தது.
இவ்வருடத் தொடக்கத்தில்தான், இதே போன்றதொரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பெறப்பட்ட அறிக்கை, ஆம் ஆத்மி கட்சி நாளொன்றுக்கு ரூ.16 லட்சம், தனது விளம்பரங்களுக்காக செலவழிக்கிறது எனத் தெரிவித்தது. வருடத்திற்கு ஆம் ஆத்மி, 526 கோடி ரூபாய் செலவழித்தார்கள். இந்த தகவல் பரபரப்பானதை அடுத்து, பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது என பி.ஜே.பி-கட்சியினர் பகிரங்கமாகக் குற்றச்சாட்டினர்.
மோடியின் விளம்பரச் செலவுகள் பற்றி கருத்து கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "எமர்ஜென்சி கால கட்டத்திலும் இப்படித்தான், ’இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா’ என்பது போன்ற வாசகங்களை இந்திரா காந்தி பிரபலப்படுத்திக் கொண்டார். இது அத்தனையும் மக்களை திசைதிருப்பும் செயலே" எனக் தெரிவித்துள்ளனர்.
பி.ஜே.பி தரப்போ,”தூய்மை இந்தியா போன்ற பெரும் திட்டமெல்லாம் பிரதமரின் முன்னெடுப்பால்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், அவர்தான் 'ஐகான்' என்னும்போது, அவருடைய விளம்பரத்துக்குச் செலவு செய்வதில் தவறில்லை” என கருத்து கூறியுள்ளது.
Comments
Post a Comment