Skip to main content

டெஸ்ட் 2 - இங்கிலாந்தை 246 ரன்களில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியை இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. நேற்றைப் போலவே இன்றும் தோல்வியைத் தவிர்க்க மிக நிதானமாகவே இங்கிலாந்து வீரர்கள் விளையாடினர். ஆனால் ஆட்டம் ஆரம்பித்த சில ஓவர்களிலேயே அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து மோயின் அலியும் 2 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார்.
அடுத்த 10 ஓவர்களுக்கு களத்தில் தாக்குப் பிடித்த ரூட் - ஸ்டோக்ஸ் இணை 85-வது ஓவரில் பிரிந்தது. ஜெயந்த் யாதவ்வின் சுழல் வீச்சில் ஸ்டோக்ஸ் பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரிலேயே ரூட்டும் ஷமியின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரஷித் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க முடியாத நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட வந்த இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்டு 16 ரன்களை மட்டுமே சேர்த்தனர்.
அன்சாரி விக்கெட்டை அஸ்வின் எடுக்க, பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
அஸ்வின், யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 3-வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்குகிறது

Comments