டீஸர் 20ம் தேதி மும்பையில் வெளியீடு : இணைய தளங்களில் 2.0 கதை லீக்

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை ஷங்கர் இயக்குகிறார். எமி ஜாக்ஸன், அக்‌ஷய் குமார் நெகடிவ் வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினியின் ரோபோ தோற்றம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக வரும் 20ம் தேதி மும்பையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்படுகிறது. யஷ்ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு விழா நடக்கிறது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகிறார். 

ஷங்கர் எமி ஜாக்ஸன், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா சுபாஷ்கரன் உள்ளிட்டோருடன் மும்பை பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். லைகா நிறுவனத்தின் யு-டியூப் மற்றும் லைகா மொபைல் ஆப் மூலமாகவும் நேரலையாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 2.0 கதை என்ன? என்று இணைய தளங்களில் பல்வேறு கிசுகிசுக்கள் உலா வருகின்றன. சிட்டி ரோபோவை தனித்தனியாக பிரித்து அழித்த விஞ்ஞானி ரஜினி, யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்றுவிடுகிறார். 

அப்போது மற்றொரு விஞ்ஞானி கண்டுபிடித்த ரோபோ ஒன்று ஊரையே சூறையாடத் தொடங்குகிறது. போலீஸ், ராணுவம் உள்ளிட்ட யாராலும் அதை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும்போது காணாமல் சென்ற விஞ்ஞானி ரஜினி என்ட்ரி தருகிறார். ஏற்கனவே பிரித்து அழித்த சிட்டி ரோபோவுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதைக்கொண்டு வில்லத்தனம் செய்யும் ரோபோவை எப்படி அழிக்கிறார் என்று கதை செல்வதாக சுவராஸ்யமான ஒரு தகவலும் இணைய தளத்தில் லீக் ஆகியிருக்கிறது. வில்லன் ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி வேடத்தில்தான் அக்‌ஷய்குமார் நடித்துள்ளாராம்.

Comments