புதிய ரூ.2000 நோட்டுக்கள் சிக்கின பறக்கும்படை சோதனையில் ரூ.8.23 கோடி பறிமுதல்


தஞ்சை: தஞ்சையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.23 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தலையொட்டி தஞ்சையில் நடத்தை விதி அமலில் உள்ளது. இதையொட்டி, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே டான்டெக்ஸ் ரவுண்டானா அருகே  நிலையான கண்காணிப்பாளர் ஜானகிராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த பெட்டியில் ரூ.7.85 கோடி ரொக்கம் இருப்பது தெரியவந்தது.  இப்பணம் திருச்சி மண்ணச்சநல்லூர் பேங்க் ஆப் பரோடாவிலிருந்து தஞ்சாவூர் பேங்க் ஆப் பரோடாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஜீப்பில் வந்த வங்கி கிளார்க்  தெரிவித்தார். ஆனால் வாகனத்தின் பதிவு எண்ணும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த வாகன பதிவு எண்ணும் வெவ்வேறாக இருந்தன. அவ்வாகனத்தில் தனியார்  பாதுகாப்பு படையை சேர்ந்த 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள், ஒரு டிரைவர், ஒரு கிளீனர் வந்திருந்தனர். 

இதையடுத்து பணத்துடன் அவ்வாகனத்தை தஞ்சை தாலுகா அலுவலகம் கொண்டு வந்து பணப்பெட்டியை இறக்கி சரிபார்த்தனர். அதில் ரிசர்வ் வங்கியால் புதிதாக  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதேபோல் தஞ்சை-நாகை பைபாஸ் சாலையில் தளவாய்பாளையம் ரவுண்டானா  அருகே நிலையான கண்காணிப்பாளர் மரியஜோசப் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.38.50 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. 

இந்நோட்டு கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகும். இதையடுத்து வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது சிதம்பரம், சீர்காழி  பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எடுத்துக்கொண்டு திருச்சி பஞ்சாப் நேசனல் வங்கியில் ஒப்படைக்க செல்வதாக தெரிவித்தனர்.  மேலும், அவர்கள் காட்டிய ஆவணத்தில், வாகனத்தின் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, ரூ.38.50 லட்சத்தை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர். இதுபற்றிய தகவலின்பேரில், தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை,  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் ஆகியோர் தஞ்சாவூர் தாலுகா அலுவலகம் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர். பின்னர், கரூவூலத்தில்  ஒப்படைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். 

Comments