Skip to main content

வெள்ளி முதல் வங்கிகளில் பழைய நோட்டுக்கு ரூ.2000 மட்டுமே மாற்றலாம்: மத்திய அரசு

உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் பணத்தை மாற்றிவிட்டு வங்கியிலிருந்து வெளியே வரும் முதியவர் | படம்: ப்ளூம்பெர்க்

விவசாயிகள்; திருமண வீட்டாருக்கு சில கெடுபிடிகள் தளர்வு


வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரூ.2000 மட்டுமே மாற்றலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் கடந்த 8-ம் தேதி இரவு முதல் இந்தியா முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாத பணமாகிவிட்டன.
பொதுமக்கள் தங்கள் கையிலிருக்கும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள அரசு சில வழிமுறைகளை அறிவித்தது. அதன்படி முதலில் ஒருவர் நாளொன்றுக்கு பழைய நோட்டுக்கு ரூ.4000 மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே நாளொன்றுக்கு ரூ.4,500 என சற்றே உயர்த்தப்பட்டது.
வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணத்தை மாற்றுவதாலேயே வங்கிகளில் கூட்டம் இருப்பதாகக் கூறி பணம் மாற்றுபவர்கள் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ், "பழைய ரூ.500, 1000 நோட்டுகளுக்கு இனி ரூ.2000 மட்டுமே மாற்றலாம். இந்த உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்குவரும்" என்றார்.
இன்றைய அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
1. நாளை முதல் ரூ.500, 1000 நோட்டுகளுக்கு வங்கியிலிருந்து ரூ.2000 மட்டுமே மாற்ற முடியும்.
2. திருமண சீசன் என்பதால், வீட்டில் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுத்துக் கொள்ளலாம். மணமன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் உரிய ஆவணங்களைக் காட்டி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
3. பயிர்க் காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
4. விவசாய சந்தை வர்த்தகர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் ரூ.50,000 பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
5. ராபி பருவ விவசாயத்துக்காக விவசாயிகள் கிசான் கடன் அட்டை பயன்படுத்தியோ அல்லது பயிர்க்கடன் மூலமாகவோ வாரத்துக்கு ரூ.25,000 பெறலாம்.
6. குரூப் சி பிரிவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முன் பணம் பெற்றுக் கொள்ள சலுகை அளிக்கப்படுகிறது.
7. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்த வழியில் கிடைக்கும் பணத்திலிருந்து வாரத்துக்கு ரூ.25,000 பெற்றுக் கொள்ளலாம்.

Comments