இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்' என்று உலகளவில் 25 கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது, 'டைம்' பத்திரிகை. பல்வேறு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் விளைபொருளான ஆரஞ்சு சுவையுடைய ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரகமும் இடம்பெற்றுள்ளது. இது இடம்பெறக் காரணம்... அது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து காப்பாற்றியிருப்பதுதான்.
என்ன பிரச்னை?
ஆப்பிரிக்க பகுதிகளில் பரவி வந்த எபோலா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பிரச்னைகளைவிடவும், அவர்களை அதிகம் அச்சுறுத்தி வந்தது, ஊட்டசத்துக் குறைபாடுதான். துணை சகாரா பாலைவனப் பகுதிகளில் வாழும் 43 மில்லியன் குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 6 வயதுக்குள்ளாகவே இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள்... பார்வை பறிபோதல், வளர்ச்சிக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்களுக்குள்ளாகின்றனர். 118 நாடுகளில், 140 மில்லியன் குழந்தைகள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் குறைபாட்டை சரி செய்வது என்பது கடினமான காரியம். அதனால்தான், அவர்களைக் குணப்படுத்த இந்த ஆரஞ்சு சர்க்கரைவள்ளிக் கிழங்கை பயன்படுத்தியிருக்கின்றனர். பயோ ஃபோர்ட்டிஃபிகேஷன் (Biofortification) என்னும் உயிரி ஊட்டமேற்றும் முறை மூலம் புது ரக பயிரை உற்பத்தி செய்துள்ளனர், விஞ்ஞானிகள்.
'ஆரஞ்சு சதையுடைய ஸ்வீட் பொட்டேடோ' என அழைக்கப்படும் இவற்றை ஏற்கனவே இருந்த விளைபொருளான சர்க்கரைவள்ளிக் கிழங்கில் விட்டமின் ஏ சத்தை உயர்த்தி உருவாக்கியுள்ளனர். 2006-ம் ஆண்டில், உலக உருளைக்கிழங்கு நிறுவனம், ஹார்வெஸ்ட் ப்ளஸ் மற்றும் பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்துதான் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டன. ஆப்பிரிக்க மக்களின் உணவு மற்றும் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஷாஷா (SASHA) எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு 21 மில்லியன் டாலர்களை வழ்ங்கியுள்ளது, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை. விவசாயிகளிடமும் இப்பயிர் குறித்து எடுத்துச்சொல்லி சாகுபடி செய்ய வைத்ததோடு, விளம்பரங்களும் அதிக அளவில் செய்யப்பட்டன.
உலகின் 6-வது முக்கியப்பயிர் இதுதான்!
"இந்த ஆரஞ்சு சுவையுடைய சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில், விட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உலக அளவில் தற்போது அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளுக்கு அடுத்து 6-வது முக்கியப் பயிராக இது இருக்கிறது. வளரும் நாடுகளில் இது 5-வது முக்கியப் பயிர். ஆண்டுக்கு 105 மில்லியன் டன் அளவில் உலகம் முழுவதும் உற்பத்தியாகிறது. சீனா, இந்த ஆரஞ்சு சுவைகொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மிகப்பெரிய சந்தையாகவும், உற்பத்தி நிலையமாகவும் உள்ளது. கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உணவாக சீனாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதிகளவில், ஆசியக் கண்டத்தில்தான் இவை உற்பத்தியாகின்றன" என்கிறது, சர்வதேச உருளைக்கிழங்கு நிறுவனம்.
இந்த சிறப்பு ரகத்தை உருவாக்கியதற்காக மரியா ஆண்ட்ராடே, ராபர்ட் வங்கா, ஜேன் லோ மற்றும் ஹோவர்த் போயிஸ் ஆகிய நால்வருக்கும் இந்த ஆண்டுக்கான 'உலக உணவுப் பரிசு' வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வருமே பல ஆண்டுகளாக தங்கள் நாடுகளில் தனித்தனியாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவர்கள். 2006-ம் ஆண்டு முதல் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment