சின்னசேலம் அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி

சின்னசேலம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 27). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (17). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சாப்பிடுவதற்காக சின்னசேலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து சென்னைநோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா, விக்னேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.


இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments