தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகின.
அதன்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 136-ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அரவக்குறிச்சியில் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தஞ்சையில் ரங்கசாமி வெற்றி:
தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
தஞ்சாவூரில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி கூறும்போது, "என்னை ஆதரித்து வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் வெற்றி:
திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக 6,453 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேமுதிக 3,901 வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி:
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள்- 88,068. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி- 64,395 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில் பாஜக 1,179 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேமுதிக- 1070 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
நாராயணசாமி அமோக வெற்றி:
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி பெற்ற மொத்த வாக்குகள்: 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.
விரிவான செய்திக்கு: | நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி |
4 தொகுதிகள் பதிவான வாக்குகள் எவ்வளவு?
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
மொத்த வாக்காளர்களான 31362 பேரில் 26895 பேர் வாக்களித்தனர். இதில் 12551 ஆண் வாக்காளர்கள் (83.99 சதம்), 14,344 வாக்காளர்கள் (87.37 சதம்) என மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மொத்தம் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது.
இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
Comments
Post a Comment