மேட்டூர் அணை நீர்மட்டம் 41 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து அணை நீர்மட்டம் 41 அடியாக குறைந்தது.


மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் 2 மாதம் தாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது அணையின் நீர்மட்டம் 87.68 அடியா இருந்த நிலையில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. அதே நேரத்தில் நீர்வரத்து படிப்படியாக சரிய தொடங்கியதால் அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது.
இதற்கிடையே கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அக்டோபர் மாதம் 29-ந்தேதி விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு விநாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. எனினும், நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிமாகவே இருந்தது.

நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து அணை நீர்மட்டம் 41 அடியாக குறைந்தது. இதனால், மீன் வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைக்கு நீர் இருப்பு வைத்து கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணி துறை நிர்வாகம் நேற்று முதல் விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதால் சாகுபடி முழுமை பெறுமா? என்ற கவலை, அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று அணைக்கு நீர்வரத்து 58 கன அடியாக இருந்தது. இன்று சற்று உயர்ந்து விநாடிக்கு 102 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 8 மணி அளவில் அணை நீர்மட்டம் 41.11 அடியாக உள்ளது.

Comments