வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒரே நாளில் ரூ.44 லட்சம் காணிக்கை
வேலூர்,
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் நேற்று கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தது. ஒரே நாள் உண்டியல் வருமானமாக ரூ.44¼ லட்சம் கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
வேலூரில் உள்ள கோட்டை வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்துவருகிறார்கள். அவர்கள் தங்களின் வேண்டுதலுக்காக கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தினமும் எண்ணப்பட்டு வருகிறது.
அவ்வாறு எண்ணும் போது ஒருநாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உண்டியலில் பணம் செலுத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக இதுவரை ரூ.50 ஆயிரம் வரை உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது
இந்த நிலையில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க கடந்த 8–ந் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகிறார்கள். ரூ.2½ லட்சத்துக்குமேல் வங்கிகளில் செலுத்துபவர்கள், நகை வாங்குபவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் தாங்கள் பதுக்கி வைத்துள்ள பணங்களை எந்தவழியில் வெளியே கொண்டுவரலாம் என்பது பற்றி சிந்தித்து வருகிறார்கள். அதில் பலர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கட்டுகளை கோவில் உண்டியல்களில்செலுத்தி வருகிறார்கள்.
ரூ.44¼ லட்சம் வருமானம்
அதன்படி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உண்டியலிலும் சிலர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக செலுத்தி இருக்கிறார்கள். நேற்று ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணுவதற்காக நிர்வாகிகள் உண்டியலை திறந்தனர். அப்போது மூலஸ்தானத்தின் முன்புள்ள உண்டியலில் வழக்கத்துக்கு மாறாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக கிடந்தன. உண்டியல் காணிக்கை எண்ணி முடித்தபோது ரூ.44 லட்சத்து 34 ஆயிரத்து, 473 இருந்தது.
அதில் 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.30 லட்சத்து 29 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.14 லட்சத்து 500 இருந்தது. மற்றும் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் இருந்தது. மொத்தம் இருந்த ரூபாய்களில் 44 லட்சத்து 29 ஆயிரத்து 473 ரூபாயில் 44 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாகும்.
36 ஆண்டுகளுக்கு பிறகு
வழக்கமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே உண்டியலில் காணிக்கையாக பணம் செலுத்தப்பட்டிருக்கும். அதிக பட்சமாக 50 ஆயிரம் வரை இருந்ததாகவும், ஒரேநாளில் லட்சத்தை தாண்டி அதுவும் கட்டுக்கட்டாக ரூ. 44¼ லட்ச காணிக்கையாக கிடைத்திருப்பது 36 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்
Comments
Post a Comment