Skip to main content

சென்னையில் புதிய ரூ.500 விநியோகம் தொடங்கியது: எஸ்பிஐ தலைவர்


கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா | படம்: எம்.பெரியசாமி.

சென்னையில் ரூ.500 விநியோகம் தொடங்கிவிட்டதாகவும், தமிழகத்தில் சில்லறை தட்டுபாடு ஓரிரு நாட்களில் சீரடையும் எனவும் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் ரூ.500 நோட்டுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக கோவை உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கும். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் சில்லறை தட்டுப்பாடு சீரடையும். பாரத ஸ்டேட் வங்கியிடம் போதிய அளவில் ரூ.100 நோட்டுகள் இருக்கிறது. எனவே, பணத் தட்டுப்பாடு இனி வரும் நாட்களில் குறையும்.
கறுப்புப் பண ஒழிப்புக்காக மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் விளைவு வரும் நிதியாண்டில் தெரியும். நோட்டு நடவடிக்கை அறிவிப்புக்குப் பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வாராக்கடன் பல வசூலாகியுள்ளன.
கடந்த 8-ம் தேதியன்று நோட்டு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகள் பலவும் தங்களுக்கு கார்டு மெஷின் (ஸ்வைப்பிங் மெஷின்) வழங்குமாறு கோரி வருகின்றனர். மும்பையில் மட்டும் 650 மருத்துவமனைகள் கார்டு மெஷினுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதேபோல் நாடு முழுவதும் 3600 சுங்கச் சாவடிகளில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பணத் தட்டுப்பாட்டை குறைக்க எஸ்பிஐ சார்பில் 841 நடமாடும் ஏடிஎம்-கள் இயக்கப்படுகின்றன. வங்கிகளில் வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரும் தொழிலதிபர்களின் கடன்களை ஸ்டேட் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். பெருந் தொழிலதிபர்களின் கடன் கண்காணிக்கப்படுகிறது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளையில் கல்விக் கடன் வாங்கியவர்களுக்கும் அதனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற தார்மீக பொறுப்பு இருக்கிறது" என்றார்

Comments