மதுரை ஜி.ஹெச்சில் செல்லாத ரூ.500 வாங்க மறுப்பு இரு கால்களையும் இழந்த பெண் சிகிச்சை பெற முடியாமல் கதறல்


மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஊழியர் செல்லாத 500 ரூபாயை வாங்க மறுத்ததால், இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பெற வழியின்றி, கடும் வலியுடன் ஊர் திரும்பிய பரிதாபம் நடந்துள்ளது. தேனி மாவட்டம், சுருளிப்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தாய். 3 மாதத்திற்கு முன்பு விபத்தில் சிக்கியதில், இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு இரு கால்களும் (முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி) அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், நேற்று காலை மீண்டும் காயத்தின் தன்மையை பரிசோதிக்க அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறினார். ஸ்கேன் மையத்திற்கு சென்ற ஆசைத்தாய் தன்னிடம் இருந்த பழைய 500 ரூபாயை கொடுத்தார். அப்போது பணியில் இருந்த ஊழியர் ‘இந்தப் பணம் செல்லாது’ எனக்கூறி வாங்க மறுத்து விட்டார். நீண்டநேரம் கெஞ்சிப் பார்த்தும் பணத்தை வாங்க மறுத்ததால் ஸ்கேன் எடுக்க முடியவில்லை. இதனால் சிகிச்சை பெற முடியாமல் மீண்டும் ஊர் திரும்பினார்.

ஆசைத்தாய் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பழைய ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நவ. 24 (நேற்று) வரை செல்லும் என்று அறிவித்திருந்ததால் சிகிச்சைக்கு வந்தேன். ஆனால் செல்லாத ரூபாய் நோட்டுகள் வாங்கக்கூடாது என டீன் உத்தரவிட்டுள்ளதாக கூறி, ஊழியர் வாங்க மறுத்துவிட்டார். என்னிடம் வேறு பணம் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல், கடுமையான வலியுடன் வீடு திரும்புகிறேன்’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். டீன் வைரமுத்து ராஜூவிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘பழைய 500, 1000 நோட்டுகள் நவ. 24 இரவு வரை வாங்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாங்க மறுப்பு தெரிவித்த ஊழியர் குறித்து, என்னிடம் புகார் கூறி இருந்தால் நடவடிக்கை எடுத்து இருப்பேன். இதுவரை என்னிடம் புகார் வரவில்லை’’ என்றார்

Comments