இஸ்லாமாபாத்: இந்திய தாக்குதலில் 7 பொது மக்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
அராஜகம்:
சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் பொது மக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி தாக்கி வருகிறது. இதில் பலர் பலியாகியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாகியுள்ளனர். நேற்று இந்திய பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் 3 பேரை கொன்று விட்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் தப்பி சென்றனர். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலர் காயம்:
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்தி: நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் துதிநியால் என்ற இடத்தில், எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா அத்துமீறி நடத்திய தாக்குதலில், பஸ்சில் சென்ற பொது மக்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்திய தாக்குதலில், கடந்த வாரத்துடன் சேர்த்து 14 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு:
இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொன்றதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம்.இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், நற்பெயரை கெடுக்கவும் வெளியிடப்படும் கற்பனை செய்தி. பாகிஸ்தான் ராணுவம் நன்கு பயிற்சி பெற்றது. இது போன்ற நெறிமுறையற்ற, தவறான வழிகளில் செல்லாது. இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் என்றும் ஆதரித்ததில்லை. எல்லையிலும், சர்வதேச எல்லையிலும் எந்த வித அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
2 பேர் காயம்:
இதனிடையே, ராஜோரி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
Comments
Post a Comment