ரூபாய் நோட்டு வாபஸ்: 93 சதவீதம் பேர் பிரதமருக்கு ஆதரவு


புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய தயாரிக்கப்பட்ட ‛நரேந்திர மோடி ஆப்' இல் ஒரே நாளில் 5 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். கருத்துக்கணிப்பின் முடிவில் 93 சதவீதத்தினர் கறுப்பு பணத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மோடி ஆப்



கறுப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பொதுமக்களின் நேரடி கருத்துக்களை அறிய பிரதமர் மோடி விரும்பினார். இதன்படி, ‛நரேந்திர மோடி ஆப்' தயாரிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில், மோடி ஆப்பில் நவ.,23 ம் தேதி மதியம் 3.30 மணி வரை பதிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வெளியாகி உள்ளது. 
கருத்துக்கணிப்பு முடிவுகள்:


24 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 500, 1000 ரூபாய் வாபஸ் நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கறுப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 4 நட்சத்திர ரேட்டிங்கிற்கு மேலாக ஓட்டளித்துள்ளனர்.73 சதவீதம் பேர் மிக புத்திசாலிதனமானது என 5 நட்சத்திர ரேட்டிங்கிற்கு ஓட்டளித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிரான ஒட்டுமொத்த அரசின் நடவடிக்கைக்கு 92 சதவீதம் பேர் மிக நல்லது அல்லது நல்லது என பதிவு செய்துள்ளனர்.
ஊழல், பயங்கரவாத நிதியுதவி, கறுப்பு பணம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும், அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராகவும் சிலர் செயல்பட்டு வருவது உண்மை என்று 86 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கறுப்பு பணம் இருப்பதாக 98 சதவீதத்தினர் எண்ணுகின்றனர்.
99 சதவீதம் பேர் கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக போரிட வேண்டியதும் ஒழிக்கப்பட வேண்டியதும் அவசியம் என தெரிவித்துள்ளனர்.
90 சதவீதம் பேர் அரசின் நடவடிக்கை மிக புத்திசாலிதனமானது என தெரிவித்துள்ளனர்.
நிமிடத்திற்கு 400 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
2,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளிலிருந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
5 லட்சம் பேரில் வெறும் 2 சதவீதத்தினர் மட்டுமே அரசின் நடவடிக்கை மிகவும் சுமாரானது அல்லது ஒரு நட்சத்திரத்திற்கு ஓட்டளித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் இருந்து கருத்துக்களை பதிவு செய்த 5 லட்சம் பேரில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள், அதிலும் 24 சதவிதத்தினர் ஹிந்தி மொழி மூலம் கருத்து பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments