அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன. அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் ஹிலாரிக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்து வந்தார். இதனால் ஹிலாரியே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கருத்துக்கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 ஓட்டுக்கள் தேவை. இந்நிலையில் டிரம்ப் 276 ஓட்டுக்கள் பெற்றார். இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறையாகும்.
அதிபர் தேர்தலில் பெண்களும், இளைஞர்களும் ஹிலாரி அதிக அளவில் ஓட்டுக்கள் அளித்திருந்த போதிலும் 218 ஓட்டுக்களை மட்டுமே அவர் பெற்றிருந்தார். 

யார் இந்த டிரம்ப் :




70 வயதாகும் டிரம்ப், நியூயார்க் நகரில் பிறந்தவர். பென்சில்வேனியா பல்கலை.,யில் பொருளாதார பட்டம் பெற்ற இவர், துவக்கத்தில் தந்தை பிரட் டிரம்ப்பின் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்களை கவனித்து வந்தார். பின்னர் தொழில்கள் அனைத்தையும் விரிவுபடுத்தி, அனைத்திற்கும் தனது பெயரை சூட்டினார். இவர் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். 2000 ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சீர்திருத்த கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அப்போது தேர்தலுக்கு முன்னதாகவே அவர் வாபஸ் பெற்றார்.
பின்னர் சில படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்தார். ஓட்டல்கள், அலுவலக டவர்கள், கேளிக்கை விடுதிகள், கோல்ப் அரங்குகள் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வரும் டிரம்ப், 2016ம் ஆண்டு போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 324 வது இடத்திலும், அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 156 வது இடத்தையும் பிடித்தார். புதிய தொழில் துவங்கினாலும், திருமணம் செய்தாலும் அதனை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் பழக்கத்தின் மூலம் அமெரிக்க மக்களிடையே பிரபலமானவர் டிரம்ப்.

Comments