Skip to main content

டிவி ஒளிபரப்பில் 'பிச்சைக்காரன்' சாதனை: விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

'பிச்சைக்காரன்' பட ஒளிபரப்பின்போது, தனியார் தொலைக்காட்சி தர மதிப்பீட்டில் 24.55 புள்ளிகள் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
விஜய் ஆண்டனி, சாத்னா டைட்டஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்திருந்தார். மார்ச் 2016ல் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம், தமிழை விட பெரும் வசூல் செய்து 100 நாட்களை கடந்து திரையரங்களில் திரையிட்டார்கள். தற்போது 'பிச்சைக்காரன்' படத்தின் இந்தி ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. ரூபாய் நோட்டு உத்தி அறிவிக்கப்பட்ட போது, 'பிச்சைக்காரன்' படத்தில் இடம்பெறும் வசனத்தை அனைவருமே சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டார்கள்.
ரூபாய் நோட்டு உத்திகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 'பிச்சைக்காரன்' படத்தை ஒளிபரப்பியது. அன்றைய தினம் BARC இணையதளத்தில், தொலைக்காட்சி நிறுவனத்தின் தர மதிப்பீட்டில் (TRP) 24.55 புள்ளிகள் கிடைத்தது. 24 புள்ளிகள் என்பது மிகப்பெரிய விஷயமாக திரையுலகில் பேசப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என திரையரங்கு வாயிலாக வரவேற்பு கிடைத்திருக்கும் பட்சத்தில், தொலைக்காட்சி வாயிலாகவும் சாதனை படைத்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.

Comments