ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கொல்கத்தா



















கொல்கத்தா,

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளதால் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய கவுகாத்தி அணி 5-வது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது. தடுப்பாட்டத்தில் கொல்கத்தா செய்த தவறு, கவுகாத்தி வீரர் நிகோலஸ் வேலெசுக்கு சாதகமாகிப் போனது.

போதாக்குறைக்கு கோல் கீப்பர் மஜூம்டெரும் தன் இடத்தை விட்டு முன்னேறி வந்து விட, அவரை ஏமாற்றி வேலெஸ் எளிதாக கோல் அடித்து விட்டார்.
அதன் பிறகு கொல்கத்தா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட போதிலும் பல வாய்ப்புகள் வீணாகின. கவுகாத்தி வெற்றியை நோக்கி பயணித்த வேளையில், கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கொல்கத்தாவின் நட்சத்திர வீரர் இயான் ஹூமே தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். சக வீரர் போஸ்டிகா தலையால் முட்டிய பந்து கம்பத்துக்கு வலது புறம் செல்ல, அதை ஹூமே வலைக்குள் தள்ளினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன

Comments