'மாவீரன் கிட்டு' படத்தின் கதைக்களத்துக்காக முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுடைய சம்பளத்தைக் குறைத்து கொண்டதால் இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சுசீந்திரன் எழுதி, இயக்கியிருக்கிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது படக்குழு.
இப்படத்துக்காக விஷ்ணு விஷால், பார்த்திபன், சூரி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் தங்களுடைய சம்பளத்தை கணிசமாக விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் போகிறோம் என்றவுடன், தங்களுடைய தேதிகளை மொத்தமாகவே வழங்கியிருககிறார்கள்.
இப்படத்தின் கதைக்களத்துக்காக நடிகர்களின் விட்டுக்கொடுத்தலைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
அதுமட்டுமன்றி, இப்படத்தில் காமெடியனாக இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூரி. வசனமே மிகவும் கம்மியாகத் தான் இருக்கும் என்றவுடன், "அண்ணே... உங்க படம். நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்" என்று நடித்துக் கொடுத்திருக்கிறார் சூரி.
தற்போது படத்தின் பணிகள் அனைத்து முடிந்து, டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது 'மாவீரன் கிட்டு'. இப்படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சுசீந்திரன்
Comments
Post a Comment