புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது ரோட்டில் சிதறிய நோட்டு கட்டுகள்

ரெய்ச்சூர்,

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையத்தில் இருந்து மாநிலம் முழுவது உள்ள வங்கிகளுக்கு ரூ.500, ரூ.1000 புதிய நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு செலுத்துவதற்காக புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிக்கொண்டு இன்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி சிந்தனூர் அருகே உள்ள துவிக்கலா பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பண மூட்டைகள் சாலையில் கவிழ்ந்ததுடன், நோட்டுகளும் சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

லாரிக்கு பின்னால் 4 வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், லாரிக்கு பாதுகாப்பாக நின்றதுடன், பொதுமக்கள் யாரும் பணத்தை எடுத்துச்செல்லாமலும் காவல் காத்தனர்.

பின்னர் அந்த பணத்தை வேறு வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments