தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மாயமான ராஜராஜ சோழனின் தங்கச் சிலைகளை மீட்கக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மாயமான ராஜராஜ சோழன், அவரது மனைவியின் தங்க சிலையை மீட்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விலை மதிக்க முடியாத சிலைகள் திருடப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்தால் அவற்றை மீட்டுக் கொண்டு வருவது அரசின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில், தஞ்சை பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமா தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க சிலைகள், , கடந்த 1,900-ஆம் ஆண்டு வரை கோயிலில் இருந்தன. அதன் பின்னர், விலை மதிப்பு மிக்க அந்த சிலைகள் மாயமாகின. அதன் பின் பல நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆமதாபாத்தில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் இரு சிலைகளும் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்த சிலையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில், உண்மையான சிலை இதுதான் என்பதை உறுதிப்படுத்த முடியாததால், அந்த நடவடிக்கை அப்போது கைவிடப்பட்டது. அதன் பிறகு அந்தச் சிலையை மீட்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.இதனால், இந்தப் பழமையான தங்கச்சிலையை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பழங்காலத்து விலை மதிக்க முடியாத சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டுக் கொண்டு வருவது தமிழக அரசின் கடமை என்று சுட்டிக்காட்டியது. மேலும், மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி, இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என்பதால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments
Post a Comment