ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாததாலும், புதிய நோட்டுகளின் தட்டுப்பாடு காரணமாகவும் தமிழ் திரையுலகில் சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நாடு முழுவதும் இரு நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் நேற்று இயல்பாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பரவலாக அவ்வாறு இயங்கவில்லை.
இந்த ரூபாய் நோட்டுகள் பிரச்சினை, தமிழ் திரையுலகிலும் எதிரொலித்தது. ஒரு சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில படப்பிடிப்புகள் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடத்த முடியுமோ, அதோடு முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
இது குறித்து படங்களில் பணியாற்றும் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரிடம் பேசியபோது, "சிறு முதலீடு படம் என்றால் 5 லட்சமும், பெரிய முதலீடு படம் என்றால் குறைந்தது 15 லட்சம் ரூபாய் வேண்டும். பிரதமரின் அறிவிப்பால் படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளில் சம்பளம் அளிக்க முடியவில்லை.
மேலும், கையிருப்பில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு சமாளித்து வந்தோம். அவை காலியானவுடன் வங்கியிலும், உடனடியாக பெரும் தொகைக்கு புதிய நோட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் நடைபெற்று வந்த 12 படப்பிடிப்புகளில் 9 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
தற்போது இருக்கும் சூழல் சரியானால் மட்டுமே, எந்தொரு இடையூறுமின்றி படப்பிடிப்பு நடக்கும். கையிருப்பில் பெரும் தொகையோடு படப்பிடிப்பு தொடங்க சில காலதாமதம் ஆகலாம் " என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர்கள் ஆலோசனை
இந்த வாரம் வெளியாகி இருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'மீன்குழம்பும் மண்பானையும்' ஆகிய 2 படங்களின் வசூலை முன்வைத்துத் தான் அடுத்த வாரம் படங்களை வெளியிடலாமா என்று முடிவு செய்ய்யவிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை இந்த மாத வெளியீட்டிலிருந்து டிசம்பர் மாத வெளியீட்டிற்கு ஆலோசனை செய்து மாற்றியிருக்கிறார்கள்
Comments
Post a Comment