Skip to main content

விஜய், புஜாரா அபார சதம்; இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி

சதநாயகர்கள் விஜய், புஜாரா. | படம்: கே.ஆர்.தீபக்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமான இன்று முரளி விஜய், செடேஸ்வர் புஜாரா ஆகியோர் சதம் எடுத்து ஆடி வருகின்றனர், இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி சற்று முன் வரை முரளி விஜய் 259 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 103 ரன்களுடனும், புஜாரா 178 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 107 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 185 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இன்று காலை 63/0 என்று தொடங்கிய இந்திய அணி கவுதம் கம்பீரை அவரது சொந்த எண்ணிக்கையான 29 ரன்களில் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்து யார்க்கர் லெந்தில் பெரிய அளவில் உள்ளே வர கம்பீர் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பந்தை தட்டி விட முயன்றார், முன்னங்கால் சற்று கூடுதலாகவே முன்னால் நகர மட்டையை அவரால் சரியான நேரத்தில் பந்தின் மேல் இறக்க முடியவில்லை, கால்காப்பைத்தாக்க எல்.பி.ஆனார்.

அதன் பிறகு புஜாரா இறங்கினார், தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் உத்தியை எதிர்கொண்டார், ஹெல்மெட் இல்லையெனில் அவர் இந்நேரம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்திருப்பார்.

தொடர்ந்து ஆக்சன் ரீப்ளே போல் வோக்ஸ் வீசிய 3 பவுன்சர்களையும் பந்திலிருந்து கண்ணை எடுத்து முகத்தை வலது புறம் திருப்பி ஹெல்மெட்டில் வாங்கினார், ஆனால் அவர் பதற்றமடையவில்லை.

அதன் பிறகு அருமையான சில ஷாட்களை ஆடினார். விஜய்யை காட்டிலும் வேகமாக ரன் குவித்தார். விஜய் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்களை அடித்தார், சதம் அடிப்பதற்கு முன்பாக 90களுக்கு நுழைய லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் விஜய், பிறகு பிராடை ஒரு அருமையான பிளிக் அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி என்று சதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை அடில் ரஷீத் வீச கூக்ளியில் கால்காப்பில் பட கடுமையான முறையீடு எழுந்தது, விஜய் பதற்றமடைந்தார், ஆனால் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தோல்விதான் ஏற்பட்டிருக்கும், காரணம் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது. அடுத்த பந்து எட்ஜைக் கடந்து சென்றது லெக்ஸ்பின். இப்படி தடுமாறிய பிறகு 66 ரன்களில் விஜய் இருந்த போது 19 வயது இளம் வீரர் ஹசீப் ஹமீது கவர் திசையில் கேட்சைக் கோட்டை விட்டார், பிராட் கடும் கடுப்பானார். கடுமையாக உழைத்து ஒரு வாய்ப்பை உருவாக்கினால் அது தவறவிடப்படும் போது ஏற்படும் நியாயமான கோபம் பிராடினுடையது. இந்திய அணி சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது

Comments