இன்ஜினியர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக கருப்பு பணம் : லஞ்சம் எந்தவிதத்திலும் தவறில்லையாம்



லக்னோ : ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு தடை செய்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இன்ஜினியர் ஒருவரது படுக்கையறையில் கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும், தற்போது அதை மாற்ற அவர் முயற்சித்து கொண்டிருக்கும் விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு தடை செய்வதாக அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பண முதலைகள் இந்த அறிவிப்பால் உறைந்து போனார்கள் எனலாம். முறைகேடாக பணத்தை சம்பாதித்து பதுக்கி வைத்தவர்கள் திருடனுக்கு தேள் கொட்டினால் போல உணர்ந்தனர். 

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அரசு பொதுப்பணித்துறை இன்ஜினியர் ஒருவர், லஞ்சமாக வாங்கிய பணத்தை படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார். கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சேர்த்து, அவற்றை கட்டிலுக்கு அடியில் டிரங்க் பெட்டி ஒன்றில் வைத்திருந்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு பயந்து, அச்சமடைந்த அந்த இன்ஜினியர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் கடந்த 8ம் தேதி மாலை தியான வகுப்பில் இருந்தபோது என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் எனக்கு போன் செய்தார். பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்துக்கு காலை முதல் மதிப்பு கிடையாது என்று பிரதமர் கூறுவதாகவும் தொலைக்காட்சியை பார்க்கும்படியும் கூறினார். அவர் கூறியவுடன் முதலில் சில நிமிடங்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. எனது நண்பர்களுடன் பேசினேன். அவர்களது குரல்களிலும் விரக்தி தெரிந்தது. அவர்களும் லஞ்ச பணம் வைத்துள்ளனர் என்பது எனக்கு தெரியும். 

லஞ்சம் என்பது அரசு பணிகளில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இல்லை. ஒவ்வொரு விழாவின்போதும், எனது மேற்பார்வையாளர்கள் மற்றும் அவர்களது மகன்களுக்கு ரிஸ்ட் வாட்ச், பேன்ட், சூட் மற்றும் தங்க ஆபரணங்களை பரிசாக தருவேன். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஏதோ ஒன்று தேவை. ஆனால் அவற்றை எல்லாம் என் சம்பள பணத்தில் இருந்து செய்திருப்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? ஒருபோதும் கிடையாது. சாலை பணி போன்றவற்றுக்காக ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே விலை மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கும். அதற்காக கமிஷன் தருவார்கள். இதனை நீங்கள் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திட்ட மதிப்பீட்டின் ஒவ்வொரு நிலையிலும் சட்ட விரோதமாக பணம் கைமாறும். அமைச்சர் முதல் ஒவ்வொருவரும் இந்த கமிஷனால் பயன்பெறுவார்கள்.

நான் லஞ்சமாக பெற்ற பணத்தை, மற்றவர்கள் பெற்றதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஒன்றுமேயில்லை. இப்போது எனது பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் அது என்ன என்பதை கூற அவர் மறுத்துவிட்டார். இப்படி கட்டுக்கட்டாக லஞ்சம் வாங்கியவர்கள், இப்போது அதை மாற்றுவதற்கான வழிமுறைகளை யோசித்து கொண்டிருக்கின்றனர்

Comments