ஆயிரம் ரூபாயை மாற்ற முடியாத அதிர்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில பெண் ஒருவர் வங்கி வாசலிலேயே அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்தவர் தித்ரஜி ( வயது 40) சலவைத் தொழிலாளி. படிப்பறிவு இல்லாத, தித்ரஜி நேற்று கோரக்பூரில் உள்ள வங்கிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 ஐ எடுத்துச் சென்று டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர்தான் பணத்தை இரு நாட்களுக்கு மாற்ற முடியாது என்பது தெரிய வந்துள்ளது.
இதனை தவறாக புரிந்து கொண்ட, தித்ரஜி வங்கியில் இருந்து சோகத்திலும் விரக்தியிலும் வெளியேறியுள்ளார். வங்கி வாசல் அருகே வரும்போது தித்ரஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்த தித்ரஜி வங்கி வாசலிலேயே மரணமடைந்தார். அவரது கையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் பாஸ்புக் அருகேயே சிதறிக் கிடந்தன.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தித்ரஜியின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் தித்ரஜியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் குஷாங்கர் சாம்பு குமார், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த பெண்ணின் மரணத்துக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Comments
Post a Comment