ரசிகர்களின் வெற்றி... ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு


அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றி ரசிகர்களின் வெற்றி என்று நடிகர் சிம்பு நெகிழ்ந்துள்ளார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பையும் கடந்து சிம்பு-கவுதம் மேனன் கூட்டணியில் வெளிவந்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தசூழலில் சென்னையில் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் அச்சம் என்பது மடமையடா படத்தைப் பார்த்த சிம்பு, படத்துக்கான வரவேற்பு தன்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ள சிம்பு, இந்த வாய்ப்பினை அளித்ததற்காக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தன்னுடைய வெற்றி அல்ல, ரசிகர்களின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ள சிம்பு, நடிகர் சதீஷ் மற்றும் நடிகை மஞ்சிமா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்னைகளால் கடந்த ஒருவருடமாக வெளிவராமல் இருந்த அச்சம் என்பது மடமையடா படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.65 லட்சத்தை இந்த படம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

Comments