தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று குமரிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருப்பதால் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:-
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத் தாழ்வு நிலை வலுப்பெற்று குமரிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சூரங்குடியில் 40 மில்லி மீட்டர், திருச்செந்தூர், குந்தா அணை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சேரன்மகாதேவி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கும்பகோணம், மதுக்கூர் ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சாத்தான்குளம், வலங்கைமான், அண்ணா பல்கலைக்கழகம், நன்னிலம், கேளம்பாக்கம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்கால், பரமக்குடி, நீடாமங்கலம், புள்ளம்பாடி, அறந்தாங்கி, இளையாங்குடி, விளாத்திகுளம், சீர்காழி, ஆடுதுறை, சாத்தூர், விருதுநகர், கொடைக்கானல், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Comments
Post a Comment