இனி செல்போன் மூலம் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம்..!


ஏ.டி.எம் இயந்திரத்தில் செல்போன் மூலம் பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் தனியார் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம்மில் நாம் பணம் எடுக்கும் போது,அதிலுள்ள துளையில் நம்முடைய டெபிட் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டியிருக்கும்.இதனை பயன்படுத்திக் கொள்ளும் சில திருடர்கள்,ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் இயந்திரத்தை பயன்படுத்தி நம் ஏ.டி.எம் அட்டையின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டு,நமக்கு தெரியாமலேயே நம் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை திருடிவிடுவார்கள்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் செல்போன் மூலம் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பார்கிளேஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியின்படி ஏ.டி.எம் மையத்தில் உங்கள் செல்போனை காட்டினால் போதுமானது.ஸ்வைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.அதன் பின்னர் உங்கள் ரகசிய எண்ணை டைப் செய்து தேவையான தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கான பிரத்யேக அப்ளிகேஷன் ஒன்றையும் பார்கிளேஸ் வங்கி உருவாக்கியுள்ளது.இதன்படி இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்,தங்களது செல்போனில் அந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் எப்போது ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் செல்கிறோமோ,அப்போது அந்த அப்ளிகேஷனை ஏ.டி.எம் இயந்திரம் முன்னாள் ஓப்பன் செய்தால் போதுமானது.

இந்த புதிய தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய புதிய ஏ.டி.எம் இயந்திரங்களை பார்கிளேஸ் வங்கியே தயாரித்துள்ளது.அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர உள்ள திட்டத்திற்காக சுமார் 300 ஏ.டி.எம் இயந்திரங்களை நிறுவ உள்ளதாக பார்கிளேஸ் வங்கி தெரிவித்துள்ளது.

Comments