Skip to main content

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: பண தட்டுப்பாடு விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றம்| கோப்புப் படம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பணத் தட்டுப்பாடு விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சரக்கு சேவை வரி தொடர்பான மசோதாக்கள், நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு மசோதா, மகப்பேறு சலுகை மசோதா, குடியுரிமை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தின.
இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று கூறியபோது, எங்கள் கட்சி தரப்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை புதன்கிழமை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் திமுக உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
அப்போது, ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதவிர ராணுவத்தின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்ட விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் அலுவல் நேரத்தை ரத்து செய்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சி களைச் சமாளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
எனவே குளிர்கால கூட்டத்தொடர் அமளி நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments