இடைத்தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படாமல் திமுக தொடர்ந்து ஜனநாயக பணி ஆற்றும் என அக்கட்சியின் பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "இடைத்தேர்தலின் தீர்ப்பை ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பது திராவிட முன்னேற்ற கழகம். இருந்தபோதிலும் தமிழகத்தில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலை பொறுத்த வரையில் ஆளுங்கட்சியின் அராஜகம், அமைச்சர்களின் முறைகேடுகள், அதையும் தாண்டி தேர்தல் ஆணையம் பண விநியோகத்தை கண்டுகொள்ளாத நிலை இவைகளையெல்லாம் வைத்து ஆளுங்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், நிச்சயமாக வரக்கூடிய காலகட்டங்களில் அதிமுக ஒரு மிகப்பெரிய தோல்வியை தழுவ வேண்டிய ஒரு சூழ்நிலை நிச்சயம் வரும்.
இவ்வளவு அராஜகங்களையும், பண விநியோகத்தையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதபோதும் திராவிட முன்னேற்ற கழகம் இவ்வளவு வாக்குகள் வாங்கியிருப்பது இதைத் தெளிவாக எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
திராவிட முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரையில் இந்த தோல்வி பற்றி கவலைப்படாமல் நிச்சயமாக மக்கள் பணியை, ஜனநாயக பணியை தொடர்ந்து ஆற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியை சார்ந்த அமைச்சர் பெருமக்கள் முகாமிட்டு பகிரங்கமாக பண விநியோகம் செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை தேர்தல் ஆணையம் நூற்றுக்கு நூறு கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் நாடறிந்த உண்மை" என்றார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தினார்கள் என அதிமுக குற்றம் சாட்டுகிறார்களே என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "அப்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக இங்கு பண விநியோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறார்களா? புதுச்சேரியில் என்ன நடந்தது என்பதை அந்த மக்கள் நன்கு அறிவார்கள். அதேபோல தமிழகத்தில் அதிமுகவினர் பண விநியோகம் செய்தது நாடறிந்த உண்மை" எனக் கூறினார்
Comments
Post a Comment