சுவையான சுவாரசியங்கள் : அறிவியல் அரசன்...!



புகுன்சுக் வாங்டூ, பிரபலமில்லாத அறிவியலாளர். ஆனால் இவரை சில திரைப்படங்களின் மூலம் அடையாளம் காணமுடியும். இந்தியில் ‘3 இடியட்ஸ்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம், தமிழில் ‘நண்பன்’ என திரைக்கு வந்தது.

இதன் இந்தி படத்தில் அமீர்கானும், தமிழ் படத்தில் விஜய்யும் நடித்திருந்த.... குறும்புக்கார ‘கொசக்சி பசப்புகழ்’ கதாபாத்திரத்தின் உண்மை முகம் தான் ‘புகுன்சுக் வாங்டூ’. ஆம்...! புகுன்சுக் வாங்டூவின் குணாதிசயங்களையும், அறிவியல் முயற்சிகளையும் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள் முயற்சித்திருப்பார்கள்.

‘‘விண்வெளியில் பென்சில் உபயோகப்படும் பட்சத்தில் விண்வெளி பேனா எதற்கு..?, கார் பேட்டரியில் இயங்கும் வைரஸ் இன்வர்ட்டர், டூரோன் கேமரா... என திரைப்படத்தில் வெளிப்படும் அறிவியல் அதிசயங்களுக்கு சொந்தக்காரரும் இவர் தான். உலகம் அறிந்திராத இவர்... சமீபத்தில் பாலைவனத்தின் நடுவே பனி கோபுரங்களை உருவாக்கி சாதனைப்படைத்திருக்கிறார்.



‘ஐஸ் ஸ்டூபா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பனி கோபுரங்கள்... இரவில் வீசும் குளிர்காற்றை பயன்படுத்தி பனி கோபுரங்களாக உருமாறும் வகையில் இதன் தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக் கிறார். பனி கோபுரங்களுக்கு நடுவே இருக்கும் குழாய் அமைப்புகள், பகலில் உருகும் பனிக்கட்டிகளை நீராக மாற்றி வறண்ட நிலத்திற்குள் பாய்ச்சுகிறது. இந்த அறிவியல் சோதனைக்கு 6–ம் வகுப்பு மாணவர்களை உதவியாளர்களாக புகுன்சுக் பயன்படுத்தி இருக்கிறார். இவையின்றி, பலூன் நீர் ஊற்று, இந்திய எல்லையில் பறக்கும் கண்காணிப்பு மையம், உப்பு நீரில் எரியும் விளக்கு.... என புகுன்சுக்கின் கண்டுபிடிப்புகள் 400–ஐ தாண்டுகின்றன. இவை அனைத்திற்கும் உரிய காப்புரிமை பெற்றிருக்கும் புகுன்சுக் காஷ்மீர், டெல்லி போன்ற பகுதியில் ஏழை குழந்தைகளுக்கான அறிவியல் வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.


அடிமை டூ அயன்மேன்..!

ஹாலிவுட் சினிமாவில் ‘அயன்மேன்’ கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கும், ராபர்ட் டவுனியின் இளமை வாழ்க்கை மிகவும் வலிகள் நிறைந்தவை.

போதைப் பொருட்களின் அடிமை வாழ்க்கையில் தத்தளித்தவருக்கு, சிறை தண்டனையும் கிடைத்தது. பின்னாளில் விடுதலையானவர், வாழ்க்கையை ரசித்து வாழஆரம்பித்தார். போதைப் பொருட்களை மறந்து, சினிமா உலகிற்கு அடிமையானவர், மார்வல் ஸ்டூடியோவினால் பெரும் நட்சத்திரமாக மாறினார். அவஞ்சர்ஸ், அயன்மேன், ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களால் சினிமா ரசிகர்களை, தன்னுடைய அடிமையாக மாற்றியிருக்கிறார்.


அப்படியா..?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர் என்ற புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. பாகிஸ்தானில் இயங்கிவரும் ஒரு செய்தி சேனல், இந்த சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட உலகமே அதிர்ந்திருக்கிறது.

அதில், ‘டிரம்ப் 1954–ம் ஆண்டு பாகிஸ்தானின் வசிரிஸ்தானில் பிறந்தவர், அவருடைய பெயர் தாவூத் இப்ராகிம் கான் என்றும், அவரது பெற்றோர் விபத்தில் இறந்துவிடவே, இங்கிலாந்து வாழ் இந்திய ராணுவ தளபதி டிரம்ப்பை லண்டனுக்கு அழைத்து சென்றதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அங்கு வசித்தவரை அமெரிக்காவை சேர்ந்த தற்போதையே குடும்பத்தினர் தத்து எடுத்து வளர்க்கவே, இன்றைய அமெரிக்கா அதிபராக வளர்ந்திருக்கிறார்’ என்பதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம். அதற்கு வலுசேர்க்க டிரம்பின் குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த செய்தி, புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டிரம்ப தான் பதிலளிக்க வேண்டும்..!


இதுவும் சாதனை தான்

பிஸ்கட்டை, தேநீரில் நனைத்து உண்பதை எல்லாம் கின்னஸ் சாதனையாக மாற்றி, உலகை அசத்தியிருக்கிறார், சைமன் பெரி. இங்கிலாந்து நாட்டவரான சைமன், தேநீர் பிரியர்; அதுவும் காலைப் பொழுதை தேநீர்–பிஸ்கட் இல்லாமல் ஆரம்பிக்கவே மாட்டாராம்.

 இப்படி தேநீரும் கையுமாக சுற்றித்திருந்தவர், அதைக்கொண்டே கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார். அட ஆமாங்க...! சாகச முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதை கின்னஸ் அமைப்பினர் சாதனையாக அங்கீகரித்திருக்கிறார்கள். ‘அப்படி என்ன செய்தார் சைமன்?’ என்கிறீர்களா.. ‘73 மீட்டர் உயரமுள்ள பாலத்திலிருந்து தலைகீழாக குதித்தபடி, தேநீரில் பிஸ்கட்டை நனைத்து சுவைத்திருக்கிறார்’. இவ்வளவு தான் சங்கதி என்றாலும், சைமனின் தைரியமும், குறி தப்பாத இலக்கும் அவரை கின்னஸ் சாதனையாளராக மாற்றியிருக்கிறது.



அதிசயம் நிறைந்த அலாஸ்கா

அலாஸ்கா பகுதிகளில் விளையும் காய்கறிகள் வழக்கத்தை விடவும் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. கையளவில் பார்த்த உருளைக்கிழங்குகள், இங்கு பொதி மூட்டை அளவில் முளைக்கின்றன.

பூங்கொத்து போல மலரும் முட்டைக்கோஸ், அலாஸ்காவில் பூச்செடி போல பரந்து விரிந்திருக்கிறது. பூசணிக்காய் தண்ணீர் தொட்டி அளவிலும், பாகற்காய், பூசணியை மிஞ்சும் அளவிலும் காய்க்கின்றன. இதுமட்டுமா... கேரட், பீட்ரூட், வெங்காயம் என எல்லாமே அலாஸ்காவில் பிரமாண்டம் தான். ஆச்சரியமாக பார்க்கப்பட்டாலும், அலாஸ்காவின் அபரிமிதமான வளர்ச்சியில் அறிவியலும் ஒளிந்திருக்கிறது. இங்கு 20 மணி நேரத்திற்கு அதிகமாக சூரிய ஒளி கிடைப்பதால், தாவர வகைகள் அதிக சூரிய ஒளியை உட்கொண்டு பிரமாண்டமான விளைச்சலைக் கொடுக்கின்றன.


வித்தியாசமான விற்பனையாளர்

ஜிம்பாப்வேயில் மில்லியன் கணக்கானோர், வாழ்க்கையை நடத்த பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் ப்ராய் என்பவர், இந்தக் கூட்டத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு விற்பனையாளர். ‘என்னுடைய பெயர் ப்ராய் முஷாயடிமோ, நான் தண்ணீர் விற்பவன். அழுக்காக இருப்பது வாடிக்கையாளரின் அனுதாபத்தை பெற்று தருவதாக சிலர் எண்ணுகின்றனர்.

ஆனால் நான் ஆடை அணியும் முறை வாடிக்கையாளர்களை கவர்வதாக எண்ணுகிறேன். மக்கள் நல்ல விஷயங்களால் கவரப்படுகின்றனர். கோட்–சூட்டுகளை விற்பதை விட

தண்ணீர் விற்பது நல்லதென கருதுகிறேன். ஏனெனில் மக்கள் ஆடைகள் வாங்காமல், ஓராண்டை ஓட்டி விடலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தினமும் நீர் தேவைப்படுகிறது’ என்பவர்... தனக்கான சூட்டுக்களை தானே தயாரித்துக்கொள்கிறார். இதுவரை ப்ராயிடம் 500–க்கும் மேற்பட்ட கோட்–சூட்டுகள் இருக்கிறதாம்.


கூகுள்... கூகுள்... பண்ணிப்பார்த்தேன்...!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டதில் இருந்தே கூகுள் தேடலின் கீழே, ‘பைன்ட் ஆன் ஏ.டி.எம் நியர் யூ’ என்ற வசதியை வழங்கியிருக்கிறார்கள்.  இதன் மூலம் அருகே உள்ள ஏ.டி.எம். பற்றிய தகவலை அறியலாம்.

இந்தியா இஸ் ‘மை’ கண்ட்ரி... வாசகத்தை இப்படியும் யோசித்திருக்கிறார்கள். 




சமநிலை சிற்பங்கள்..!


கனடா நாட்டின் ஆற்றுப் படுகைகள்... அழகிய கலை சிற்பங்களாக எழுந்து நிற்கின்றன. 

சிறு கற்களில் நிற்கும் பாறை அமைப்புகள், கூழாங் கற்களின் வரிசையில் நிற்கும் பெருங்கற்கள், காட்டாற்று வெள்ளத்திற்கு ஈடுகொடுக்கும் கல் பாலங்கள் என சின்னச் சின்ன கற்களில் கலைப்படைப்புகளை படைத்து வருகிறார், மைக்கேல் கிராப். பொருட்களை சம நிலைப்படுத்துவதில் கைதேர்ந்தவரான இவர் ‘ராக் பேலன்சிங்’ என்றக் கலையை உலகமெங்கும் பிரபலப்படுத்தி வரு கிறார். இவரது கண்களில் சிக்கும் சிறிதும், பெரிதுமான பொருட்கள் எல்லாம் அழகிய சமநிலை சிற்பங்களாக மாறிவிடுகின்றன. இதுவரை கனடா நாட்டின் ஆற்றுப்படுகைகளை அழகுப்படுத்தியவர், மிகவிரைவில் உலகப் புகழ்ப்பெற்ற  ஆற்றுப்படுகைகளையும் அழகுப்படுத்த இருக்கிறாராம்

Comments