டாஸ்மாக்கை குறிவைத்த அதிகாரிகள்! -கறுப்பு வெள்ளையான மர்மம்

ரசு நிறுவனங்களின் உதவியோடு கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர் ஊழியர்கள். ' ஒரே இடத்தில் பணத்தை மாற்றாமல், இடத்துக்கு தக்கவாறு 500, 1000 ரூபாய் நோட்டுக் கட்டுக்களை அதிகாரிகள் திணிக்கிறார்கள்' என்கின்றனர் அரசு ஊழியர்கள். 
மத்திய அரசு வெளியிட்ட, ' பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே, வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரையில், வங்கிகளில் மூன்று லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், "அரசின் உத்தரவால் போக்குவரத்து, டாஸ்மாக், ஆவின் உள்பட பல அரசு நிறுவனங்கள் சிரமத்தில் உள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் 30 சதவீத நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதிக வருவாய் வரும் கடைகளை குறிவைத்து அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" எனக் குமுறுகிறார் டாஸ்மாக் பணியாளர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம், "விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், கடந்த சில நாட்களாக தன்னிடம் உள்ள பணக் கட்டுகளை டாஸ்மாக் கடைகளின் சூப்பர்வைசர்களிடம் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு கடைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வீதம் கொடுத்துவிட்டு, 50, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொள்கிறார். அவர் தரும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கட்டச் சொல்கிறார். இதனால் கடுமையான சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
விருதுநகரில் மட்டும் 170 கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்றால், தினமும் பல லட்சம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது. தவிர, மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன. தவிர, டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதல் கட்டணம், காலி பாட்டில்கள், அனுமதியற்ற பார்கள் என முறைகேடாக பல வழிகளில் பணம் வருகிறது. இந்தப் பணத்தையெல்லாம் முதலீடு செய்யாமல், அதிகாரிகள் பலர் பதுக்கி வைத்துள்ளனர். அந்தப் பணத்தையெல்லாம் வெள்ளையாக மாற்றுவதற்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். டாஸ்மாக் சூப்பர்வைசர்களும், ' உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்' என அமைதியாக இருக்கின்றனர். நாங்கள் வசூலிக்கும் சில்லறைகளை, நேரடியாக களவாடுகின்றனர். இதில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணங்களும் மாற்றப்படுவதாகச் சொல்கின்றனர்" என்றார் வேதனையோடு. 
"டாஸ்மாக் மட்டுமல்லாமல், போக்குவரத்து, ஆவின், கூட்டுறவு பண்டக சாலைகள், ரேசன் கடைகள், அமுதம் சிறப்பு அங்காடிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பணம் புழங்கும் அமைப்புகளை குறிவைத்து சில அதிகாரிகள் இயங்குகின்றனர். சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழகங்களின் கலெக்சன்களில் அ.தி.மு.க.வினர் விளையாடியதாக செய்திகள் வெளியானது. அரவக்குறிச்சி தேர்தல் செலவுகளுக்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக புகார் எழுந்தது. இப்போது டாஸ்மாக் கடைகளை குறிவைக்கின்றனர். இதுவரையில், வாங்கிய கறுப்புப் பணத்தையெல்லாம், வெள்ளையாக மாற்றுவதற்கு இதுபோன்ற யுத்திகளைப் பயன்படுத்துகின்றனர். அரசு நிறுவனங்களின் கலெக்சன்களை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதால், அதிகாரிகளுக்கு எளிதாக அமைந்துவிடுகிறது. மத்திய நிதித்துறை அமைச்சகம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் வைக்கின்றனர் அரசு ஊழியர் சங்கத்தினர்.

Comments