வரி செலுத்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படுவதால் தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சியில் நேற்று ஒருநாள் மட்டும் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் அதிகபட்சமாக 19 கோடி ரூபாய் வசூலானது. மதுரை மாநகராட்சியில் இன்று காலை நிலவரப்படி 9 கோடியே 14 லட்ச ரூபாயும், திருப்பூரில் 7 கோடி ரூபாயும் வசூலானது. ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகரட்சிகளில் 4 கோடி ரூபாயும், வேலூர் மற்றும் நெல்லை மாநகராட்சிகளில் 2 கோடி ரூபாய்க்கும் மேலும் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்றுவரை 70 லட்ச ரூபாயும், தஞ்சை மாநகராட்சியில் 65 லட்ச ரூபாயும் வரி வசூலாகியுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் வரி செலுத்த சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதால் வரி செலுத்துவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறைந்த நாட்களில் அதிக அளவில் வரி வசூலாவது இதுவே முதல் முறை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment