Skip to main content

உயிர்த் தியாகம் செய்யாது எதிரிகளை சுட்டு வீழ்த்துவீர்: ராணுவ வீரர்களுக்கு பாரிக்கர் அறிவுரை

மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர். | கோப்புப் படம்.
எதிரிகளைக் கண்டதும் சுட்டு வீழ்த்துமாறு ராணுவ வீரர்களிடம் அறிவுறித்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் வாஸ்கோ நகரில் பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனோகர் பாரிக்கர், "காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளைக் கண்டால் அவர்களை உடனடியாக சுட்டு வீழ்த்த முழு அதிகாரம் இருக்கிறது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்வரும் காத்திருந்துவிட்டு தங்கள் இன்னுயிரை இழந்து வீரர்கள் தியாகியாகத் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு.
நான் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றபின் ராணுவ வீரர்களிடம் நான் கூறிய அறிவுரை "கையில் ஏகே-47 துப்பாக்கியோ, இல்லை கை துப்பாக்கியோ யாராவது வைத்திருப்பதைப் பார்த்தால் அவர்கள் உங்களிடம் வந்து ஹலோ சொல்ல காத்திருக்காதீர்கள். அதற்குள் அவர்கள் உங்களை கொன்றுவிடுவார்கள். மாறாக உடனடியாக தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரராக இருங்கள். உங்களை உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை" என்பதே.
முந்தைய காங்கிரஸ் அரசு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்வரை பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றே வீரர்களிடம் வலியுறுத்திவந்தது. ஆனால், மோடி பிரதமராக பதவியேற்றபின் நிலைமை அப்படியில்லை.
ராணுவ வீரர்கள் மத்தியில் உத்வேகம் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க ராணுவம் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலை எதிர்பார்த்திருக்கத் தேவையில்லை. அதனால், எல்லையில் நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Comments