Skip to main content

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்

படம்.| ஏ.எஃப்.பி.
ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்கவில்லை
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் அறிவித் துள்ளன.
இடதுசாரிகள் சார்பில் 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆனால் முழு அடைப்பு போராட் டத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத் துள்ளதாக பாஜகவினர் தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித் தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளன.
இடதுசாரிகள் பந்த்
இடதுசாரிகள் சார்பில் இன்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பண மதிப்பு நீக்கத்தை கடுமையாக எதிர்த்து வந்தாலும், பந்த்துக்கு ஆதரவில்லை என தெரிவித் துள்ளார்.
நிதிஷ் கட்சி பங்கேற்காது
இதனிடையே, இந்தப் போராட் டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித் துள்ளது.
போராட்டம் தேவையா?
உத்தரப் பிரதேச மாநிலம் குஷி நகரில், பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பரிவர்தன் பேரணியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால் எதிர்க்கட்சியினரோ இதை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். போராட்டம் நடத்த வேண்டுமா அல்லது கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமா என நீங்களே (பொதுமக்கள்) கூறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Comments