Skip to main content

தற்போதைய போரில் சாமானியர்களே படைவீரர்கள்: பிரதமர் மோடி சிலாகிப்பு


பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்

'ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக தேசம் நடத்தும் இந்தப் போரில் நாட்டின் சாமானிய மக்கள்தான் படை வீரர்கள்' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
டெல்லியில் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மேலும் பேசியது:
"பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வெகு சிலரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தையே முன் வைக்கின்றனர். அதாவது போதிய அவகாசம் கொடுக்காமல் ரூபாய் நோட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
உண்மையில் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாற்றிக் கொள்ள தங்களுக்கு கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது என்பதே அவர்களுடைய கவலை. ஒருவேளை நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் 76 மணி நேரமாவது கால அவகாசம் கொடுத்திருந்தால். இந்நேரம் இத்திட்டத்தை அவர்கள் சரமாரியாக புகழ்ந்திருப்பார்கள்.
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக தேசம் நடத்தும் இப்போரில் நாட்டின் சாமானிய மக்கள்தான் படை வீரர்கள். கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் சட்டதிட்டங்கள் பல்வேறு விதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு ஊழல் நடவடிக்கைகளுக்குள் சிக்கிக் கொண்டது.
இதன் விளைவு, ஊழல் தொடர்பாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பற்பல ஆய்வறிக்கைகளிலும் இந்தியா மோசமான இடத்தில் பளிச்சிட்டது. ஊழல் மிகு நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தால் நாம் எப்படி பெருமை கொள்ள முடியும். இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் இனி இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்.
அவரவர் பணத்தை பயன்படுத்த அவரவருக்கு உரிமை இருக்கிறது. சொந்தப் பணத்தைப் பயன்படுத்த யாரையும் தடுக்கவில்லை. ஆனால், எப்போதும் பணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் சூழலில் நாமும் அதற்கேற்ப மாறிக்கொள்ளலாம். மொபைல் வழியாக ஷாப்பிங் செய்வது வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவது போல் எளிதானது.
பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட வேண்டுமெனில் இதுபோன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். வெகு குறுகிய காலத்தில் நாடு முழுவதும் 500 நகரங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்த முடியும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் நாடு முழுவதும் முனிசிபல் கார்ப்பரேஷன்களில் ரூ.13,000 கோடி வரை வரிப் பணம் வசூலாகியுள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் வெறும் ரூ.3000 கோடி மட்டுமே வசூலித்த சில மாநகராட்சிகளில் தற்போது ரூ.13,000 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் சாலை சீரமைப்பு, மின் விநியோக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்" என்றார் பிரதமர் மோடி

Comments