நிரப்பிய சில மணி நேரத்திலேயே காலியாகிவிட்டது: ஏ.டி.எம்.களில் காத்திருந்தும் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

சென்னை

ஏ.டி.எம்.களில் நிரப்பிய சில மணி நேரத்திலேயே பணம் காலியாகிவிடுவதால், காத்திருந்தும் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பணத்தை மாற்றுவதற்கும் வழக்கம்போல் வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

கருப்பு பணத்தை ஒழிக்க...

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். தாங்கள் கையில் வைத்திருந்த பணத்தை வைத்து அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை கொண்டுவந்து சேர்க்கும் வகையில் வங்கிகளுக்கு ஒரு நாள் விடுமுறையும், ஏ.டி.எம். மையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டன.

ஏ.டி.எம். சேவை முடங்கியது

2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் கடந்த 11-ந் தேதி முதல் ஏ.டி.எம். மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ரூ.100 மற்றும் ரூ.50-க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம். மையங்கள் முழுமையாக செயல்படவில்லை. 80 சதவீதத்துக்கும் மேலான ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. நேற்று 3-வது நாளாக ஏ.டி.எம். மையங்கள் முடங்கியது.

சென்னையில் பெரம்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர், பாரிமுனை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, சூளைமேடு, சேப்பாக்கம், தியாகராயநகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

ஏமாற்றம்

அந்த பகுதிகளில் திறந்திருந்த சில ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. திறந்திருந்த ஏ.டி.எம். எந்திரங்களிலும் 100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு நிரப்பமுடியவில்லை. இதனால் பணம் நிரப்பிய சில மணி நேரத்திலேயே பொதுமக்கள் எடுத்துச் சென்றுவிடுவதால் காலியாகிவிடுகிறது.

இதனால் நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களை தேடி ஒவ்வொரு பகுதிகளுக்கும் அலைந்து திரிந்ததை காணமுடிந்தது. திறந்திருந்த சில ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க சிலர் ஆவலோடு சென்றனர்.

குளிர்பானங்களுடன் வந்த மக்கள்

ஆனால் அந்த எந்திரங்களில் வெறும் காகிதம் மட்டுமே வந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒட்டுமொத்தத்தில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நேற்றும் அவதி அடைந்தனர். சென்னை நகரம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெறிச்சோடி காணப்படுவது வழக்கம்.

ஆனால் நேற்று வங்கிகள் செயல்பட்டதால் வார நாட்கள் போன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வழக்கம்போல் பொதுமக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் குளிர்பானங்கள், வெயில் மற்றும் மழையில் இருந்து தப்பிக்க குடைகளையும் வைத்திருந்தனர்.

வாக்குவாதம்

சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், சூளை, ஓட்டேரி, வேப்பேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றுவதற்கு வந்திருந்தவர்கள் காத்திருந்து மாற்றிச்சென்றனர்.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவர்களுக்கு சில வங்கிகளில் ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்றி கொடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிலர் வங்கி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததை காணமுடிந்தது.

ரூ.4-க்கு விண்ணப்ப படிவம்

சென்னை சூளையில் உள்ள கனரா வங்கி அருகே பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் படிவம் ரூ.4-க்கு பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. பணம் மாற்ற விண்ணப்பிக்கும் படிவம் வங்கிகள் இலவசமாக வழங்கும் நிலையில், பணத்திற்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை தினத்தன்று வீட்டில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் பலரும் நேற்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்பு கால் கடுக்க காத்து நின்றனர். வங்கிகள் எங்கு இருக்கின்றது? என்று கேட்ட பலருக்கு, இந்த வரிசையில் நில்லுங்கள், வங்கிக்குத்தான் செல்கிறது என்ற பதில்தான் வந்தது.

வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பும் நேற்று வழக்கம்போல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கூட்டம் அலைமோதியது. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் பணத்தை மாற்றுவதற்கு வந்திருந்தார்கள்.

இதேபோல மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளும் பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சிறப்பு கவுண்ட்டர்களில் மாற்றிச்சென்றனர்.

நேற்று தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய்க்கு பணம் மாற்றி கொடுக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று பணத்தை பொதுமக்கள் மாற்றிச்சென்றனர்.

எப்போது சீராகும்?

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ.டி.எம். மையங்களில் சரியாக பணம் நிரப்பமுடிவதில்லை. ரிசர்வ் வங்கி போதுமான அளவு பணம் அனுப்பி வைத்தால் நாங்கள் நிரப்ப தயாராக இருக்கிறோம். வங்கி பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கடந்த சில நாட்களாக போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்.

புதிதாக அச்சிடப்படும் ரூ.500 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து தட்டுப்பாடு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏ.டி.எம். மையங்கள் முழுவீச்சில் செயல்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இம்மாதம் இறுதி வரை ஆகும் என்று கருதுகிறோம் என்றார்.

Comments