பிரதமர் நரேந்திர மோடியை திடீரென ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது கறுப்பு பண ஒழிப்புக்கான நடவடிக்கை என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் கறுப்பு பணத்தை வைத்துள்ளவர்கள் தங்கமாகவும், வைரமாகவும், நிலமாகவும், வெளிநாட்டு வங்கிகளிலும்தான் பணத்தை வைத்துள்ளனர். ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பண மதிப்பு நீக்க அறிவிப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரித்துள்ளார். தனது அறிவிப்பால் பெரு முதலாளிகள் பலர் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், பெருமுதலாளிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனை வைகோ ஆதரிக்கிறாரா? ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் நாளை (இன்று) போராட்டம் நடத்துகின்றன. இதனை பொதுமக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்.
Comments
Post a Comment