Skip to main content

மாவட்ட நீதிமன்ற கருவூலங்களில் உள்ள பல கோடி ரூபாயை மாற்றுவது எப்படி?- ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வட்ட நீதிமன்ற கருவூலங்களில் இருப்பில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் இளங்கோவன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக நீதிமன்றங்களில் வழக்குகளில் தொடர்புடைய பணம், அந்தந்த நீதிமன்ற கருவூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை உட்பட 7 மாவட்டங்களில் நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ரூ.2 கோடிக்கும் அதிகமான பணத்தை என்ன செய்ய வேண்டும் என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தப் பணத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் உள்ளன. இப்பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவடைந்த பிறகு வழக்கில் தொடர்புடையவர்கள் அல்லது அரசுக்கு வழங்கப்படும்.

செல்லாத நோட்டுகளை டிசம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றவும், மார்ச் வரை டெபாசிட் செய்யவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்குகளில் இறுதி முடிவு வரும்போதுதான் இப்பணத்தை மாற்ற முடியும். மத்திய அரசு தெரிவித்துள்ள காலக்கெடுவுக்குள் பணத்தை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை.

இதனால் நீதிமன்ற கருவூலத்தில் இருப்பில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அல்லது டிசம்பருக்கு பிறகும் பணத்தை மாற்றவும், மார்ச்க்கு பிறகு டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாக முத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, வரும் 22-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Comments