கையை பிடித்து இழுத்த ஆசாமியை கல்லால் அடித்து விரட்டிய மாணவி

வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்தபோது கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்ற ஆசாமியை பள்ளி மாணவி கல்லால் தாக்கி விரட்டியடித்தார். வேலூர் பழைய பஸ் நிலையம் எதிரே கம்பீரமாக நிற்பது கற்கோட்டை. சுதந்திர போரில் முக்கிய இடம்பிடித்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர்.
இங்கு முள்புதர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் இளம்பெண்கள் தனியாகவோ, 2,3 பேராக சென்றாலோ அங்கு மறைந்திருக்கும் மர்ம நபர்கள் பாலியல் தொல்லை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுதவிர பல்வேறு சமூக விரோத செயல்களும் கோட்டையில் நடப்பதாக புகார்கள் உள்ளன. இதை தடுக்க கடந்த காலங்களில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அத்துடன் கோட்டையை சுற்றி குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது இவை இரண்டுமே இல்லாததால் சமூக விரோத செயல்கள் தடையின்றி நடக்கிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கோட்டையின் அழகை சுற்றிப்பார்த்தபடி மதில் சுவர் ஓரம் 2 பள்ளி மாணவிகள் நடந்து சென்றனர். அப்போது அங்கு முள்புதரில் பதுங்கியிருந்த ஆசாமி ஒருவர், திடீரென ஒரு மாணவியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றான். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்த கருங்கற்களை எடுத்து சரமாரியாக வீசினார். இதனால் பயந்துபோன அந்த ஆசாமி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் மாணவி விடாமல் துரத்தியபடி நுழைவுவாயில் வரை வந்தார். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் திரண்டு ஆசாமியை பிடிக்க முயன்றும் முடியவில்லை.

பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது இச்சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் துணிச்சலை அவர்கள் பெரிதும் பாராட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் நடைபெறும் அத்துமீறல் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்குள்ள முள்புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments