ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் முன்பு சத்தமாகப் பேசியதால் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் மாற்றுத்திறனாளி என்பதால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து கட்ஜூ நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதி மற்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், சவுமியா வழக்கு தொடர்பாக விவாதிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கட்ஜு, வழக்கு விசாரணையில் நீதிபதிகளின் பல்வேறு கருத்துகளுக்கு எதிராக வாதிட்டார். கடைசியாக கட்ஜுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டிஸ் அனுப்புவதாகவும், 4 வார காலத்தில் அதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விளக்கமளித்ததால், நீதிமன்ற வளாகத்தில் இருந்து கட்ஜூவை வெளியேற்ற காவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைக்கேட்ட கட்ஜு கடும் கோபமடைந்தார். அப்போது நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகோய்யைப் பார்த்து “மிஸ்டர். கோகோய் நீங்கள் என்னை மிரட்டி பார்க்காதீர்கள். நான் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். இந்தியா சுதந்திரமான நாடு, உங்களால் எனது சுதந்திரத்தை தடுக்க முடியாது” என்று சத்தமாகப் பேசினார். இதையடுத்து அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
நீதித்துறை வரலாற்றில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் வழங்குவது இதுவே முதல் முறை. இதனிடையே, சவுமியா வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமிக்கு தண்டனை குறைப்பு வழங்கியதை எதிர்த்து கேரள அரசும், சவுமியாவின் தாயும் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments
Post a Comment