தொடரும் பரிதாப மரணம் : உத்திரப்பிரதேசத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்து பலி
வங்கிகளிலும், ஏ.டி.எம்-களிலும் பணம் மாற்ற மற்றும் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் மயங்கி விழுந்து, நெரிசலில் சிக்கி முதியவர்கள் உயிரிழப்பது நாட்டில் தற்போது வாடிக்கையாகிவிட்டது. உத்திப்பிரதேச மாநிலத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசலில் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நூற்றுக்கணக்கானோர் வங்கி ஒன்றில் திரண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் நின்றிருந்த ராம்நாத் என்ற 60 வயது விவசாயி ஒருவர் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்நாத் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த விவசாயி ராம்நாத் குழந்தை பிறந்த தனது மருமகளின் மருத்துவச் செலவுக்கு பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment