பயிர்கள் காய்ந்ததால் மனஉளைச்சலில் மேலும் ஒரு விவசாயி மரணம்


நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர், பரங்கிநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத விரக்தியில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள பரங்கிநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயபால் தனது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை வைத்து சம்பா சாகுபடி செய்திருந்தார். போதுமான தண்ணீர் கிடைக்காததால் நிலத்திலேயே அமர்ந்திருந்தார். மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் வந்து படுத்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி, அண்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரெத்தினவேல்(60) அதே பகுதியில் (மாரியம்மன் கோயில் அருகே) தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். மழை இல்லாததால் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக விதைப்பு செய்தும் பயனளிக்கவில்லை.
இதனால், வெளியிடத்தில் நெல் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்த விவசாயி ரெத்தினவேல், அண்மையில் பெய்த லேசான மழை ஈரத்தைக்கொண்டு நடவுப் பணி மேற்கொண்டார். நடவு செய்த நாற்றும் போதிய வளர்ச்சி இல்லாத நிலையில், புதிய பறித்த நாற்றுகளை ஊடு பயிராக நடவு செய்யும் பணியில் அவர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார். அப்போது அவர் மயங்கி வயலில் விழுந்து உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 1 வாரத்தில் 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல சில நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயி கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் அருகே உள்ள கீழதிருப்பத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்ற விவசாயி வயல் வேலைக்கு சென்ற இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள விவசாயிகள் அழகேசன் நெய் பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் விரக்தியில் மரணமடைந்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் போதிய அளவு இல்லாமல் போனதால் காவிரி கடைமடை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விரக்தி அடைந்த நாகை மாவட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடுமை தொடந்து நிகழ்ந்து வருகிறது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Comments