சென்னை:
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மின்னணு நிறுவனம் கடந்த 18.6.11 அன்று தொடங்கியது.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஆகியவை சேர்க்கை முகமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு மையம், 285 வட்டாட்சியர் அலுவலகங்களில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியின் 36 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு மையம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஒரு மையம் என மொத்தம் 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 124 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை நீங்கலான இதர மாநகராட்சிகள் என ஆக மொத்தம் 206 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. ஆக மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் தற்போது முழுவீச்சில் இயங்கி வருகின்றன.
இந்த ஆதார் உதவி மையங்களில், ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்து, சில வினாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
இந்த வழிமுறையில் கிடைத்த ஆதார் நம்பரை ஆதார் உதவி மையங்களின் அருகிலேயே இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து, விரல்ரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 கட்டணம் செலுத்தி கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10 மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, ஆதார் எண்ணிற்கு ஒரு முறை பதிவு செய்தவர்கள் திரும்ப திரும்ப நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்லத்தேவையில்லை. இதற்கு ஆதார் உதவி மையங்களை அணுகலாம்.
Comments
Post a Comment