பழைய ரூ.500 நோட்டுகள் இன்னும் ஒருநாள் மட்டுமே செல்லும்: அரசு

 பெட்ரோல் பங்க் மற்றும் விமான நிலையங்களில் இன்னும் ஒருநாள் மட்டுமே (டிச.2 வரை) பழைய 500 ரூபாய் செல்லுபடியாகும் என்று மத்திய அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக பெட்ரோல் பங்க், மருத்துவமனை, பள்ளிகளில் டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் செலுத்தலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்து கவனிக்கத்தக்கது. அந்தக் கால நீட்டிப்பு இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் எண்ணெய்ப் பொருட்களை பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கும், விமான நிலையங்களில் விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 2-ம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை புதிய அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இது மட்டுமன்றி பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனை யகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவை களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் நவம்பர் 14-ம் தேதி வரை ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதையடுத்து, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில் முன்பதிவு மையங்கள், பால் விற்பனையகங்கள் உள்ளிட்ட பொது சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகள் ஏற்கப்படும். ரூ.1000 நோட்டுகளை இனி எங்கும் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்போது கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. பழைய நோட்டுகள் மூலமாக முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இனி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Comments