சென்னை:
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு சிறைத்தண்டனை பெற நேரிட்டது.
இதன் காரணமாக 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
பெங்களூரில் சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா மேல் முறையீடு செய்து குற்றமற்றவர் என்று விடுதலை ஆனார். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு (2015) மே மாதம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்த வெற்றிவேல் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் அதே ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிந்து சுமார் 6 மாதங்களே கழிந்துள்ள நிலையில் ஜெயலலிதா மரணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் காலியாகி உள்ளது. இதனால் ஆர்.கே. நகர் தொகுதி கடந்த 1½ ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மே மாதம் அங்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இரண்டு தடவை போட்டியிட்டதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடையே அ.தி.மு.க.வுக்கு தனித்துவமான செல்வாக்கு உள்ளது. எனவே அந்த இடத்தில் களம் இறங்கப்போகும் அ.தி.மு.க. பிரமுகர் யாராக இருக்கும் என்ற விவாதமும் இப்போதே தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் சிலர், அந்த தொகுதியில் சசிகலாவை போட்டியிட வைத்து எம்.எல்.ஏ. ஆக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நேற்று போயஸ்கார்டனில் சசிகலாவை அ.தி.மு.க. மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.
அப்போது இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பெறும் நிலையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாகவும் மாறினால் ஒட்டு மொத்த அதிகாரமும் அவரிடம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
Comments
Post a Comment