புதுடெல்லி,
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவுசெய்து உள்ளது.
பாராளுமன்றத்தில் தகவல் தெரிவித்த மத்திய அரசு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, அதற்கான பொருட்களை வாங்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றது.
பேப்பர் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நோக்கமானது மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய நிதி துறை இணைமந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் பதிலளிக்கையில், “பிளாஸ்டிக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதற்கான மூலக்கூறுகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,” என்றார். சோதனையை அடுத்து பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய மத்திய ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது.
10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கிய பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்ட பல்வேறு நகரங்களில் இதற்கான களஆய்வை ரிசர்வ் வங்கி நடத்தவுள்ளது. ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஷ்வர், மைசூர், கொச்சி ஆகிய நகரங்களில் முதலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் எவ்வளவு காலம் உழைக்கிறது. கள்ள நோட்டுகள் தயாரிப்பது எந்தளவுக்கு குறைகிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆராய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சராசரியாக 5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டது, இம்முறையை பின்பற்றுவது கடினமானது. ரூபாய் நோட்டுகளை பேப்பரில் அச்சடிப்பதைவிட பிளாஸ்டிக்கில் அச்சடிப்பது தெளிவானது. கள்ளநோட்டுகளை ஒழிக்க இம்முறையானது முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment