Skip to main content

அதிமுக பொதுச் செயலாளர் இன்னும் முடிவாகவில்லை: பொன்னையன்


பொன்னையன் | கோப்புப் படம்: வி.கணேசன்

அதிமுக மிகப் பெரிய கொள்கைக் கோட்டை. அதைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த உள்ள பொதுச் செயலாளார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது:
''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்படுகின்றன. அவை உண்மையற்ற செய்தி. அவை எல்லாம் வதந்தியே. அவற்றில் துளியும் உண்மையில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அடிச்சுவட்டை பின்பற்றி, தெய்வப்பற்று மிக்க கழகத் தொண்டர்களையும் காத்திடும் வகையில் பொதுச் செயலாளரை அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கும்
அதிமுக மிகப் பெரிய கொள்கைக் கோட்டை. அதைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த உள்ள பொதுச் செயலாளார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பொதுச் செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பொதுச் செயலாளருக்கு போட்டி நிலவுவதாக சொல்லப்படுவது வதந்தியே. அதிமுக கட்சி ஒற்றுமையாக உள்ளது. போட்டி, பிரச்சினை எதுவுமே உருவாகவில்லை.
ஜெயா வழிகாட்டுதல்படி அவரது அடிச்சுவட்டில் தொண்டர்களையும், மக்களையும் காக்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுச்செயலாளாருக்கு யாரும் போட்டியிடவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா யாரை நினைக்கிறதோ அவரே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதிமுகவில் வெற்றிடம் இல்லை. அந்த சூழல் உருவாகவில்லை. அதிமுகவில் ஒவ்வொரு தொண்டனும் தலைவர்தான்.
பாஜக நெருக்கடியில்லை
பாஜக நெருக்கடி தரவில்லை. அரசியல் காரணமாக புரளிகள் கிளப்பப்படுகின்றன. அதிமுக ஒரு ஆலமரம். ஒன்றரை கோடிக்கும் மேல் தொண்டர்கள் இருக்கும் தனித்தன்மை வாய்ந்த இயக்கம். நல்லது, நல்லது அல்லாததை சொல்வோம். பொதுச் செயலாளர் தேர்வு அறிவு சார்ந்த அணுகுமுறையாகவே இருக்கும்.
போயஸ்கார்டன் வருவது ஏன்?
7 நாள் துக்க அனுசரிப்பு இன்னும் முடியவில்லை. அதனால் அஞ்சலி செலுத்தவே அமைச்சர்கள் போயஸ்கார்டன் வருகிறார்கள்.
சசிகலா 'அம்மா'?
சசிகலா 'அம்மா' முக்கியமான உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் வாழ்ந்துவந்தவர். அவர்குறித்து கேள்விகள் எழுப்புவதில் அர்த்தமில்லை. அந்தக் கேள்விகள் எழக் கூடாது. அவரை அமைச்சர்கள் வந்து பார்ப்பதில் என்ன தவறு. சசிகலா- நட்ராஜன் குடும்பத்தினர் குறித்து கேள்வி கேட்பது தேவையற்றது.
ஆட்சி ஓபிஎஸ் தலைமையில் செயல்படுகிறது. கட்டுக்கோப்பான கட்சிக்கு பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. எந்த ஒரு பிரச்சினையும் கட்சியில் இல்லை'' என்று பொன்னையன் கூறினார்

Comments