புதிய விதியின் படி, தனது ஸ்டம்பை பாதுகாத்த விராட் கோலி, பந்து வீசப்படுதற்கு முன்பு நகர்ந்ததால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு இல்லை என அறிவித்தார்.
புதிய ஒயிடு விதி - கோலி சதம் விளாச எப்படி உதவியது?
இந்த போட்டியில் 42 வது ஓவர் வீசப்பட தொடங்கும் முன் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. அதாவது இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அதேவேளையில், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கோலி சதம் விளாசும் முயற்சியில் இருந்தார். அவர் சதம் விளாச வேண்டும் என்பதற்காகவே கே.எல் ராகுல் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்க்க முயலவில்லை. மாறாக கோலி ரன் சேர்க்க அவருடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து, அவருக்கு ஈடு கொடுத்து ஓடினார்.
42 வது ஓவர் தொடங்கிய போது கோலி 97 ரன்னுடன் இருந்தார். சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்து சதம் விளாசும் திட்டத்திலும் இருந்தார். ஆனால், அந்த ஓவரை வீச வந்த வங்கதேச அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான நசும் அகமது, முதல் பந்தை லெக் சைடில், அதுவும் கோலியின் காலை ஒட்டி பந்தை குத்தவிட செய்தார். பந்து ஒயிடு சென்றதாக பலரும் நினைக்கையில், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு கொடுக்கவில்லை.
அடுத்தப் பந்தை கோலி மிடில் திசையில் விரட்டினார். ஆனால் எதுவும் எடுக்கவில்லை. இருப்பினும், நசும் அகமது வீசிய 3வது பந்தை கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். அத்துடன் தனது 48 வது சர்வதேச ஒருநாள் சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். கோலி சதம் விளாசியதை அடுத்து புனேவில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
இந்நிலையில், கோலிக்கு ஒயிடு வீசப்பட்ட அந்த பந்துக்கு அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு கொடுக்க மறுத்ததது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ கிரிக்கெட்டில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட விதியின் படி தான் ஒயிடு கொடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) முந்தைய 22.1.1 பிரிவு விதிப்படி, “ஒரு பவுலர் பந்தை வீசும் போது, அது நோ பால் என அறிவிக்கப்படவில்லை என்றால், நடுவர் அதை வைடு என்று தீர்மானிப்பார்.
22.1.2-ல் உள்ள வரையறையின்படி, பந்து ஸ்ட்ரைக்கர் நிற்கும் இடத்திற்கு ஒயிடாக செல்கிறது. மேலும் இது ஒரு சாதாரண கார்டு பொசிஷனில் நிற்கும் ஸ்ட்ரைக்கருக்கு ஒயிடாக சென்றால் ஒயிடு வழங்கப்படும்.
இருப்பினும், 2022 போட்டியில், எம்.சி.சி விதி 22.1ல் சில மாற்றங்களைச் செய்தது. "நவீன கிரிக்கெட்டில், பந்து வீசப்படுவதற்கு முன், பேட்டர்கள் முன்னெப்போதையும் விட, பக்கவாட்டாக கிரீஸைச் சுற்றி நகர்கிறார்கள்" என்று அதன் அறிக்கையில் தெரிவித்தது.
"பந்து வீச்சாளர் தனது பந்து வீச வரும் போது, பேட்டர் நின்ற இடத்தைக் கடந்து சென்றால், ஒரு பந்து வீச்சு 'ஒயிடு' என்று அழைக்கப்படுவது நியாயமற்றதாக உணரப்பட்டது. எனவே, விதி 22.1 திருத்தப்பட்டுள்ளது. அதனால், பேட்டர் நிற்கும் இடத்திற்கு ஏற்பவே ஒயிடு பொருந்தும். அதாவது, பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கியதில் இருந்து ஸ்ட்ரைக்கர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அதே இடத்தில் இருந்தால் அல்லது சாதாரண பேட்டிங் நிலையில் ஸ்ட்ரைக்கரை பந்து கடந்து சென்றால் ஒயிடு வழங்கப்பட மாட்டாது" என்று புதிய தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியின் படி, தனது ஸ்டம்பை பாதுகாத்த விராட் கோலி, பந்து வீசப்படுதற்கு முன்பு நகர்ந்ததால், அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒயிடு இல்லை என அறிவித்தார். அது கோலிக்கு சாதகமாக அமைந்த நிலையில், அவர் சதமடித்து அசத்த உதவியது.
Comments
Post a Comment